பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு, தூய்மைப் பணியாளர்கள் 12-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Advertisment

தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "அரசு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களை பழைய முறைப்படி மீண்டும் பணியமர்த்த வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது இந்தப் போராட்டத்தைத் தடுக்க முயல்கிறது. முதலமைச்சர் நேரடியாக வந்து பேசி, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது வருத்தமளிக்கிறது," என்றார்.

மேலும், "அமைச்சர் கே.என். நேரு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தில் தலையிடுவது ஏன் என்று முதலமைச்சரிடமே கேட்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். 2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக இதனை உறுதியளித்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதலமைச்சர் இதற்கு ஆதரவாகப் பேசி, கடிதமும் எழுதியிருந்தார். ஆனால், இப்போது அவர் மாறுபட்டு பேசுவது வருத்தமளிக்கிறது," என்று கூறி, அந்தக் கடிதத்தின் நகலை செய்தியாளர்களுக்குக் காண்பித்தார்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற கேள்விக்கு, "ஓ.பி.எஸ். மீண்டும் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். அவரை டெல்லி பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்த வேண்டும். இதுவரை யாரும் தன்னுடன் பேசவில்லை என்று ஓ.பி.எஸ். என்னிடம் தெரிவித்தார். பாஜகவின் சந்தோஷ் அழைத்ததாகவும், அதை மறுத்ததாகவும் வெளியான செய்தி உண்மையில்லை என்றும் அவர் கூறினார். ஓ.பி.எஸ். நிச்சயமாக பாஜக கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன்," என்றார்.

Advertisment

மேலும், "வரவிருக்கும் தேர்தலில் மக்கள் யாருக்கு தோல்வி என்பதைக் காட்டுவார்கள். திமுகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காக வலுவான கூட்டணியை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பணியாற்றி வருகிறார். டிசம்பருக்குள் நல்ல மற்றும் வலுவான கூட்டணி அமையும்," என்றார். "நான் என்றுமே அதிமுகவுடன் இணைய விரும்பவில்லை. திமுகவை வீழ்த்துவதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தேன்," என்று தெரிவித்தார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன், எம்.ஜி.ஆர். குறித்து பேசியது குறித்த கேள்விக்கு, "திருமாவளவன் அவ்வாறு பேசியது அவரது குழப்பத்தைக் காட்டுகிறது. அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவர் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். மறைந்த தலைவர்கள் பற்றிப் பேசும்போது திருமாவளவன் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், வரும் தேர்தலில் அதற்குரிய விளைவுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்," என்றார்.