சமூக வலைதள பக்கங்களில் ஆபாச காட்சிகளை நீக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிரணி சார்பாக கையில் துடைப்பம், ஆபாச காட்சி புகைப்படங்களை ஏந்தி புதுக்கோட்டை சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது, 'சமூக வலைத்தளங்களை அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடைகளை அணிந்தும், ஆபாச இரட்டை வார்த்தைகளை பயன்படுத்தியும் அதிகமாக சமூக வலைத்தள வியாபாரிகள் பெருகிக் கொண்டு வருகிறார்கள்.

'பப்ஜி' விளையாட்டில் ஆபாசமாக பேசி, 'வீடியோ' வெளியிட்டதற்காக, பப்ஜி மதனை போலீசார் கைது செய்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறையில் அடைத்தனர். ஆனால், அதை விட ஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் தொடர்ச்சியாக, வீடியோ வெளியிடுபவர்களை, ஏன் கைது செய்யவில்லை எனக்கேட்டு, புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மகளிர் அணி சார்பாக புகார் மனுவோடு சைபர் கிரைம் அலுவலகத்தில் கூடி இருக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் அதாவது யூடியூப் சேனல்' பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழியாக பலரும் தங்களுக்கு விருப்பப்பட்டதை ஆபாச வார்த்தையாகவும், கவர்ச்சியாக உடை அணிந்து வீடியோ பதிவுசெய்து பதிவேற்றி வருகின்றனர். அதேநேரம், ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசி நடிக்கும் பலரும், அதை வீடியோவாக்கி, யூடியூப் சேனலில் வெளியிட்டு தன் வியாபாரத்திற்காக ஒழுக்கக் கேடான அச்செயல்களை  முதலீடாக்கி  வருகின்றனர்.

Advertisment

குறிப்பாக, குட்டிமா, காத்து கருப்பு, , திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, தமிழ் கேள் பிரியா, கத்ரீனா உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன. தற்போது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாக படிக்கின்றனர். அதற்காக, இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அத்துடன், யுடியூப் சேனல்களையும் மேற்படி உள்ள சமூக வலைத்தளங்களையும் பார்க்கின்றனர். அப்போது, ஆபாச பேச்சு வீடியோக்களும் காட்சிக்கு வருகின்றன. அவற்றையும் பார்க்கும் எதிர்கால சமூகம் கெட்டு, சீரழிந்து விடும்.

எனவே, ஆபாச பேச்சு வீடியோக்களை, யூ டியூப் சேனலில் இருந்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும். இனி, அவர்கள் பதிவிட முடியாதபடி செய்ய வேண்டும். கூடவே, இப்படி மோசமாக வீடியோ வெளியிடுபவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்த புகாரை,  சைபர் கிரைம் அலுவலரிடம கொடுத்திருக்கிறோம் மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில்  மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அனைத்து மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்பதையும் இந்த புகார் மனுவிலேயே தெரிவித்திருக்கிறோம்' என்றனர்.

Advertisment

இந்நிகழ்வு புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தனசேகரன், முகமது கனி மற்றும் மாநகரச் செயலாளர் கிழக்கு எஸ்.கே.ராஜா, மாநகரச் செயலாளர் மேற்கு ஈஸ்வரன், ஜின்னா தீபக், அசாருதீன், சுல்தான், காஜா மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.