Public traps forest officials in cage Photograph: (KARNATAKA)
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த புலியை பிடிக்கக் கோரி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் வனத்துறையினர் தாமதமாக வந்ததால் புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டுக்குள் வனத்துறையினரை அடைத்து வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர், குண்டல் பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வந்தது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்து விட்டுச் சென்றனர்.
தொடர்ந்து முயற்சித்தும் அந்த கூண்டில் புலி சிக்கவில்லை. வனத்துறையால் புலியை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் கிராம மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அந்த பகுதிக்கு நேற்று புலி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு அந்த கிராம மக்கள் தகவல் அளித்தனர். ஆனால் வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டும் வகையில் வனத்துறை ஊழியர்களை புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டுக்குள் அடைத்து தாளிட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கூண்டுக்குள்ளேயே வனத்துறையினர் அடைக்கப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளே அடைக்கப்பட்ட வனத்துறையினரை வெளியேற்றினர்.
Follow Us