நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியுள்ளது. கடந்த 1 வாரமாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று (28-07-25) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததது. அதன்படி, இன்று மக்களவையிலும், நாளை (29-07-25) மாநிலங்களவையிலும் என தலா 16 மணி நேரம் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று (28-07-25) காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிடோர் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டனர். அவை கூடியதுமே, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் முழுக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் விவாதம் நடத்தப்படாமல் மக்களவை மதியம் 1 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2 மணிக்கும் ஒத்திக்கவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை கூடியது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அதில் அவர் கூறியதாவது, “நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கினார். ஆபரேஷன் சிந்தூரை தொடங்குவதற்கு முன்பு நமது ராணுவம் அனைத்து அம்சங்களையும் கவனமாக ஆய்வு செய்தது. பாகிஸ்தானில் பொதுமக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு பயங்கரவாத உள்கட்டமைப்பை செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
நன்கு ஒருங்கிணைந்த தாக்குதல்களில், நமது ஆயுதப்படைகள் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களை துல்லியமாக குறிவைத்தன. லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளில் கொன்றோம். எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் சிந்தூருக்கு (குங்குமம்) பழிவாங்கினோம். எங்கள் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க தற்காப்புக்காகவே இருந்தன, ஆத்திரமூட்டுவதற்காகவோ இதை பெரிதுபடுத்துவதற்காகவோ இல்லை. இருப்பினும், மே 10, 2025 அன்று, அதிகாலை 1:30 மணியளவில், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியது. S-400, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் ஆகியவற்றை கொண்டு பாகிஸ்தானின் இந்த தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்கள் அடையப்பட்டதால் இந்தியா தனது நடவடிக்கையை இடைநிறுத்தியது. எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கையை நிறுத்தவில்லை. அழுத்தத்தால் தான் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது. மேலும் அது முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில், நான் எப்போதும் பொய்களைப் பேசாமல் இருக்க முயற்சித்திருக்கிறேன்.மே 10 ஆம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானில் உள்ள பல விமான நிலையங்களில் கடுமையாகத் தாக்கியபோது, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, பகைமையை நிறுத்த முன்வந்தது. இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் இந்த சலுகை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும்.
பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. எல்லையைக் கடப்பது அல்லது அங்குள்ள பகுதியைக் கைப்பற்றுவது ஆபரேஷன் சிந்தூரின் நோக்கமல்ல. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாத மையங்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியதன் அரசியல் இராணுவ நோக்கமாகும். அதனால்தான் ஆயுதப்படைகளுக்கு தங்கள் இலக்குகளைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இதன் நோக்கம் போரைத் தொடங்குவதற்கு அல்ல, எதிரியை பணிந்து போகச் செய்வதற்கு. எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மட்டுமே நமது விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள்? அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்று அவர்கள் எங்களிடம் கேட்கவில்லை? அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்றால், இந்தியா பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றுதான் இருக்க வேண்டும். அதற்கான பதில், ஆம். உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தால், இதைக் கேளுங்கள்: இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா? பதில், இல்லை, நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட எங்கள் அரசும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 பாலகோட் விமானப்படை தாக்குதல் மற்றும் 2025 ஆபரேஷன் சிந்தூர் மூலம், அமைதியை நிலைநாட்ட நாங்கள் வேறுபட்ட பாதையை ஏற்றுக்கொண்டோம். நரேந்திர மோடி அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது. இறுதியில், தர்மத்தை பாதுகாக்க சுதர்சன சக்கரத்தை எடுக்க வேண்டும் என்பதை நாம் கிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொண்டோம். 2006 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல்களைப் பார்த்தோம் - இப்போது போதும் என்று சொல்லிவிட்டு, சுதர்சன சக்கரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நம்மைப் போலவே ஒரே நிலையில் இருப்பவர்கள் மீது போர் தொடுக்கப்பட வேண்டும். கோஸ்வாமி துளசிதாஸ் அன்பும் பகைமையும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு சிங்கம் ஒரு தவளையைக் கொன்றால், அது ஒரு நல்ல செய்தியைக் கொடுக்காது. நமது ஆயுதப் படைகள் சிங்கங்கள். இன்றைய இந்தியா வித்தியாசமாக சிந்திக்கிறது, வித்தியாசமாக செயல்படுகிறது. உங்கள் எதிரி பயங்கரவாதத்தை ஒரு உத்தியாகக் கொண்டு, பேச்சுவார்த்தையின் மொழியைப் புரிந்து கொள்ளாதபோது, உறுதியாக நிற்பதும், தீர்க்கமாக இருப்பதும் மட்டுமே ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்” எனப் பேசினார். ராஜ்நாத் சிங் பேச பேச பா.ஜ.க எம்.பிக்கள் மேடையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எதிர்பக்கம் இருந்த எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டனர்.