பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். அந்த வகையில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்த பேரணி நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவமதிக்கும் வார்த்தைகளால் திட்டியதாக பா.ஜ.க பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

தர்பங்காவில் நடந்த பேரணி நிகழ்ச்சியில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட மேடையில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர். அதில் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஆகியோரை அவமதிக்கும் வகையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் பீகார் தேர்தலில் சீட் பெற விரும்பும் உள்ளூர் காங்கிரஸ் நெளஷாத்தின் பெயரையும் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது தலைவர்கள் யாரும் மேடையில் இல்லை. இருப்பினும், இச்செயலுக்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.கவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தலைவரும் மக்களவை எம்.பியுமான ரவி சங்கர் பிரசாத், ‘பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாருக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் நடத்திய யாத்திரையின் மேடையில் பயன்படுத்தப்பட்ட மோசமான மொழி மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் பிரதமர் மோடியின் தாயாருக்கு அவமரியாதை மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு அவமானகரமான தருணம்’ எனத் தெரிவித்துள்ளார்.