கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (16.01.2026) ஷிம்ஜிதா முஸ்தாஃபா (யூடியூபர்) எனும் இளம் பெண் பேருந்தில் பயணித்துள்ளார். அதே பேருந்தில் தீபக் (வயது 42) எனும் இளைஞரும் பயணித்துள்ளார். அப்போது அந்த இளைஞர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறி, அப்பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டது. இதனால் இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மற்றொருபுறம் இந்த தகவல், அந்த இளைஞரின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. இதிலிருந்து மீள முடியாத அவர், கடந்த 18ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், அவரது குடும்பத்தார் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதனைத் தொடந்து, இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், தீபக்கின் குடும்பத்தார் அளித்த புகாரையடுத்து, பாரதிய நியாய சங்கிதா பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் வழக்கு பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை சமர்பிக்கும்படி கேரளா மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் ஆறுதல் தெரிவித்து வருகினறனர்.
Follow Us