திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில்  தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக, கார்த்திகை தீபம் இன்று (03.12.2025) மாலை 06:00 மணி அளவில் ஏற்றப்பட உள்ளது. சுமார் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் இந்த தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அதோடு  தீபம் ஏற்றுவதற்கான இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் அங்குள்ள கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காலையில் தொடர்ந்து கிரிவலமாகச் சென்று வருகின்றனர். இந்நிலையில் அங்குப்  பெற்றோர்களுடன் அழைத்து வரப்படும் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி சிறுவர்களின் கைகளில் அவருடைய பெற்றோரின் பெயர், செல்போன் எண்கள், வாட்ஸ்அப் எண்கள் மற்றும் குழந்தையின் பெயர் ஆகிய விவரங்கள் அடங்கிய டேக் மற்றும் பேட்ச்கள் மூலம் எழுதி அணிவித்து வருகின்றனர். 

Advertisment

இதற்கான பணிகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். அதோடு குழந்தைகள்,  பெற்றோர்களுடன் பாதுகாப்பாகச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் சிறுவர்களின் பாதுகாப்புக்காக முகவரி மற்றும் செல்போன் எண்கள் எழுதப்பட்ட டேக் கைகளில் கட்டப்படுவதற்குப் பெற்றோர்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.