நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று (23-07-25) தொடங்கியது. கூட்டத்தொடர் கூடிய சில நிமிடங்களிலேயே, பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளின் அமளியில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

கடந்த 3 நாட்களாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வரும் ஜூலை 28ஆம் தேதி விவாதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் என தலா 16 மணி நேரம் விவாதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் பதில்களைக் கோருவதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கோள் காட்டி அரசாங்கம் அதற்கு உடன்படாமல் இருந்தது. பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பதிலளிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படைத் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 22 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நடவடிக்கை முழுமையான வெற்றியாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என்றும் வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.