நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தில் சுமார் 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.  இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் முகமது ஜாவேத், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் இந்தத் தீர்மான நோட்டீஸை வழங்கினர்.

Advertisment

இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான  இன்று (09.03.2026) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே மரபுப்படி, சபாநாயகர் மீதான பதவி (தகுதி) நீக்க தீர்மானம் விவாதத்திற்கு வரும்போது, அவர் அவையை வழிநடத்த மாட்டார். அதற்குப் பதிலாக அவர் உறுப்பினர்களுக்கான இடத்தில் அமர்ந்திருப்பார். அவருக்குப் பதிலாகத் மூத்த உறுப்பினர் ஒருவர் அவையை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மதியம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.பி.க்களுக்கு அவையில் ஆஜராகுமாறு அக்கட்சியின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். முன்னதாக ஆரம்பத்தில் இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடாத மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தற்போது இந்தத் தீர்மானத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.