Advertisment

“பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய்” - தயாநிதி மாறன் எம்.பி விளாசல்

dayanidhii

Dayanidhi Maran MP said Prime Minister Modi’s anti-Tamil speech is a lie

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் போக்கிற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கைக் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் நிறைவேற்றி வரும் முக்கிய திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.

Advertisment

பள்ளிகளில் சத்தான காலை உணவு, பெண் தொழில்முனைவோர், 50 லட்சம் புதிய  வீடுகள், 125 யூனிட் இலவச மின்சாரம் எனத் தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்கள் தேர்தல் அறிக்கை மூலம் வழிமொழிந்திருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், அவர்களின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டதை 2022-ல் திமுக அரசு கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை இப்போது பீகாரில் கொண்டு வரப் போவதாக பாஜக கூட்டணி அறிவித்திருக்கிறது.

Advertisment

 நிதி, சந்தை வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி மகளிரைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக TN RISE என்ற திட்டத்தைத் திராவிட மாடல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை மையப்படுத்தித்தான் ‘மிஷன் கரோர்பதி மூலம் பெண்கள் தொழில்முனைவோராக மாற்றப்படுவார்கள்’ என பீகார் தேர்தலுக்காக வாக்குறுதி அளித்திருக்கிறது பாஜக கூட்டணி. மாணவிகளின் உயர் கல்வி கனவை உறுதி செய்து அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடம் அமைத்துத் தரும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் புதுமைப்பெண் திட்டத்தை பின்பற்றி, ‘உயர்கல்வி பயிலும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்கும் மாதம் ரூ. 2,000 உதவித்தொகை’ வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது பாஜக தேர்தல் அறிக்கை.

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் வீட்டு உபயோக நுகர்வோருக்காக மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பீகார் தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டார்கள். நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞரால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2010- ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். கடந்த 29-ம் தேதிதான் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை முதலமைச்சர் வழங்கினார். நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவினை நிறைவேற்றும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை மையமாக வைத்துத்தான் 50 லட்சம் புதிய கான்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என பீகாரில் பாஜக கூட்டணி வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களைத் திமுகவினர் துன்புறுத்தி வருகிறார்கள்’ எனக் குற்றம்சாட்டியிருந்தார். இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்து தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பீகார் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்குக் காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்டமைப்புகளும் வேலைவாய்ப்புகளும்தான். அதனைத் தமிழ்நாடு பல ஆண்டுகாலமாக உருவாக்கி வைத்திருக்கிறது. புலம்பெயர் பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசியபோது, ‘தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவம், ரேஷன், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் எங்கள் ஊரில் இல்லை. மிகச் செலவு பிடிக்கும் சிக்கலான மருத்துவத்திற்குக் கூட பணம் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றார்கள்’ எனப் பெருமை பொங்கச் சொன்னார்கள். 

சென்னை பல்லாவரத்தில் வேலை செய்து வரும் பீகாரை சேர்ந்த தனஞ்சே திவாரி, ரீனா தேவி தம்பதியின் மகள் ஜியா குமாரி, கவுல் பஜார் அரசுப் பள்ளியில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் தேறினார். தமிழ்ப் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்று பீகார் மாணவி சாதனை படைப்பதற்குத் தமிழ்நாட்டில் கல்வி விலையில்லாமல் கிடைப்பதுதான். இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள். பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி இடம்பெயர்வது ஏன்? எனச் சொல்ல முடியுமா? பீகாரில் கட்டமைப்புகள் உருவாக்கப்படாததால்தானே பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இப்போது தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களை பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் சொல்கிறார்கள்.  ஏன் இந்த முரண்பாடு?

ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில், தமிழர்கள் திருடர்கள் என்றும் ‘தமிழர்கள் ஒடிசாவை ஆள நினைப்பதா?’ என்றும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொன்னார்கள். இப்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘பீகார் தொழிலாளர்களைத் தமிழர்கள் துன்புறுத்துகிறார்’ எனச் சொல்கிறார்கள். இப்படித் தமிழர்களை அவமதித்து அங்கே ஆட்சியில் அமர துடிக்கிறார்கள். இது பிரதமருக்கு அழகல்ல. 20 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பீகாரில் வெற்றி பெறுதற்குச் சாதனைகள் இல்லையா?. அதனைச் சொல்லி வாக்கு பெற முடியாது என்பதால் தமிழர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். வெளிப்படையாகச் சொல்வது என்றால், மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பதை அவர்கள் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் அம்பலப்படுத்திவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

Bihar Narendra Modi dayanidhi maran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe