கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தின் மேலகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கொல்லூர். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் கவிதா கொல்லூர் (18), கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 28 அன்று கவிதா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சங்கர் தெரிவித்தார். மேலும், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், அவசரமாக தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கவிதாவின் உடலை எரித்து விட்டனர்.

Advertisment

இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியது. மேலும், காவல்துறைக்கு இது குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் கவிதா எப்படி இறந்தார்? ஏன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தந்தை சங்கரிடன் அடுக்காடுக்கான கேள்விகளை எழுப்பினர். முதலில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக உறுதியாகக் கூறிய சங்கர், காவல்துறையின் கிடுக்குபிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

தவறு நடந்திருப்பதை உணர்ந்த போலீசார், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில், கவிதா தற்கொலை செய்யவில்லை, மாறாக சங்கரே அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு அவர்கள் கூறிய காரணம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கல்லூரியில் பயின்று வந்த கவிதா, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மல்லப்பா என்ற இளைஞரைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், மல்லப்பா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கவிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லப்பாவுடனான காதலை கைவிடுமாறு கவிதாவை அவரது குடும்பத்தினர் தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இருப்பினும், கவிதா மல்லப்பாவுடனான காதலில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், கவிதாவை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார்.

Advertisment

“உனக்கு பின்னால் உனது மூன்று தங்கைகள் இருக்கின்றனர். நீ வேறு சாதியைச் சேர்ந்தவனை திருமணம் செய்தால், அவர்களை யார் திருமணம் செய்வார்கள்? மல்லப்பாவை மறந்துவிடு,” என்று குடும்பத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், கவிதா மல்லப்பாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த சங்கர், ஆகஸ்ட் 28 அன்று மகள் கவிதாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், மகள் என்று கூட பார்க்காமல், அவரைக் கழுத்தை நெறித்து துடிக்க கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கவிதாவின் வாயிலும் உடலிலும் பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக ஊற்றி, அவர் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளார். மேலும், நடந்தவற்றைக் குடும்பத்தின் முக்கிய உறவினர்களிடம் கூறி, அவசரமாக கவிதாவின் உடலை எரித்துவிட்டதாக சங்கர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சங்கரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கலபுராகி காவல் ஆணையர் சரணப்பா எஸ்.டி. கூறுகையில்,  “சங்கருக்கு 4 மகள்கள் உள்ளனர். வேறு சாதியைச் சேர்ந்தவருடன் கவிதா திருமணம் செய்தால், மற்ற மூன்று மகள்களின் திருமண வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று அஞ்சி அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சங்கரை கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தக் கொலை வழக்கில் சங்கரின் உறவினர்கள் இருவர் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது. அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது. அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டால், அவர்களும் கைது செய்யப்படுவார்கள். தடயவியல் குழு ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Advertisment

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் வேறு சாதி இளைஞரை காதலித்த காரணத்தால், தந்தையே கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய சம்பவம் கர்நாடகாவில் சோகத்தையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியிருக்கிறது.