Daughter-in-law mercilessly attacks mother-in-law in uttar pradesh
வயதான பெண் ஒருவரை, அவரது மருமகளும் தாயாரும் சேர்ந்து தரதரவென இழுத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் சுதேஷ் தேவி என்ற வயதானப் பெண். இவரை, அவரது மருமகள் அகன்க்ஷா பல முறை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்க பல முறை சுதேஷ் தேவி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அகன்க்ஷாவின் குடும்பத்தினருக்கு காவல்துறையுடன் பழக்கம் இருந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுதேஷ் தேவியை அகன்க்ஷா அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், அகன்க்ஷாவும் அவரது தாயும் சேர்ந்து சுதேஷ் தேவியை மீண்டும் மீண்டும் தள்ளி அடிப்பதும், தரையில் தரதரவென இழுத்துச் செல்வது, இரக்கமின்றி கொடூரமாக அடிப்பது காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் அகன்க்ஷா மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.