அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் தஞ்சை சென்னை நெடுஞ்சாலையில் இன்று (11.11.2025) காலை 7 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி திடீரென பிடித்து சிதறியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தஞ்சையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டரை ஏற்றிச் சென்ற லாரி வாரணவாசி என்ற பகுதியில் செல்லும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சிலிண்டர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடிக்கும்போது பல கிலோமீட்டர் அளவுக்கு குண்டு வெடிப்பு சத்தம் போல் அதிர்ந்தது. இந்த வெடி விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கதி என்ன என்று இதுவரை அறியப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வாகனங்கள் எதுவும் அந்த சாலையில் இயக்கப்படவில்லை. சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நேற்று (10.11.2025) இரவு கார் வெடித்து சிதறியதில் பலர் உயிரிழந்த நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்து எதனால் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணையை துவக்கி இருக்கின்றனர். அதேநேரம் அப்பகுதியில் உள்ளோர் லாரி வேகமாக சென்ற போது வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த வெடி விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் என்பவர் இன்டேன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூரில் உள்ள டீலருக்கு லாரி முழுவதும் முழுவதும் நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்களை திருச்சியில் இருந்து அரியலூருக்கு ஏற்றி வந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வளைவில் திரும்பும் பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. பலத்த காயங்களுடன் லாரி ஓட்டுநர் கனகராஜ் குதித்து தப்பித்துள்ளார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரியில் இருந்த மற்ற சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடித்து தீ பற்றி எரிகிறது. இதனால் லாரி முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. சிலிண்டர்கள் வெடித்து வானளாவிய அளவில் தீப்பிழம்பு எழுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரியலூர் தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/ariyalur-gas-cylindr-lorry-2025-11-11-10-32-59.jpg)
தஞ்சாவூர் திருச்சியில் இருந்து அரியலூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் வி. கைகாட்டி வழியாக அருகில் ஊருக்கு மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அருகில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அருகில் வீடுகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
Follow Us