Cyclone 'Montha' is spinning - Meteorological Department releases next update Photograph: (weather)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (27-10-25) அதிகாலை 2:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது. நாளை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர், நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மோன்தா புயல் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இன்று 27ஆம் தேதி காலை 11:30 மணியளவில் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கு 560 கிலோமீட்டர் தொலைவிலும், அந்தமான் தீவில் இருந்து மேற்கே 890 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தீவிர புயலாக 28ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தில் ஓர் இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவையில் மிக லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் மற்றும் திருத்தணியில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது'' என்றார்.
Follow Us