Cyclone Montha formed early in the today morning
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (27-10-25) அதிகாலை 2:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது. சென்னைக்கு கிழக்கே - தென்கிழக்கே சுமார் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், நாளை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வங்கக் கடலில் உருவான மோன்தா புயலால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Follow Us