Cybercrime investigation; Madurai Atheenam shocked Photograph: (madurai aadheenam)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் காரில் திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யச் சிலர் எச்சரித்து இருப்பதாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை கொலை செய்வதற்கு முற்பட்டு தன்னை தாக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த பேச்சு குறித்து சென்னை அயனாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த வழக்கானது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இருவேறு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தூய்மைக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்க பலமுறை மதுரை ஆதீனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் மதுரை ஆதீனம் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். அதேநேரம் மதுரை ஆதீனம் தரப்பில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விசாரணையின் பொழுது மடத்திற்குள் ஆதினத்தைத் தவிர யாரும் இருக்கக்கூடாது என காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளே இருப்பவர்களை வெளியேற்றிவிட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் படுக்கையில் படுத்தபடியயே சைபர் கிரைம் போலீசாரின் கேள்விகளுக்கு மதுரை ஆதீனம் பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.