இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி கன்னடம் பேசாததால் பைக் ஓட்டுநர் ஒருவர், அவரை தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, ‘இந்தியில் மட்டும் தான் பேச மாட்டேன் கன்னடம் பேச மாட்டேன்’ என வாடிக்கையாளரிடம் எஸ்.பி.ஐ வங்கியின் பெண் மேலாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கன்னட மொழி பேசு பெண் ஒருவர், வேற்று மொழி பேசும் வங்கி அதிகாரியிடம் சொந்த மொழியில் பேச முடியாமல் சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் பகுதியில் கனரா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பெண் வாடிக்கையாளர் ஒருவர், கன்னடத்தில் நிதிக் கழிப்பு தொடர்பாக விளக்குமாறு வங்கி அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால், மலையாள மொழி பேசும் அந்த அதிகாரிக்கு கன்னடம் தெரியாததால் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர், ‘எனக்கு ஆங்கிலம் தெரியாது கன்னடத்தில் கூறுங்கள்’ எனக் கெஞ்சியுள்ளார். கன்னடத்தில் இந்த பிரச்சனையை தெளிவுப்படுத்த முடியாததால் விரக்தியடைந்த அந்த அதிகாரி , ‘நான் சொல்வதை உங்களாக் பின்பற்ற முடிவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மொழி தொடர்பான சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிகளில் கன்னட மொழி பேசாத ஊழியர்களை வங்கி நியமித்திருப்பதாக உள்ளூர் கன்னட ஆதரவு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பலர் விவசாயத்தை நம்பியிருப்பதாகவும், அவர்களால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாது எனவும், கன்னட மொழி பேசும் ஊழியர்களை பணியமர்த்த வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.