கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று (08/07/2025) தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் வருவதை தொலைபேசி மூலம் தெரிவிக்க அழைத்த போதும் அவர் செல்போனை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒரு முறை இரு முறை அல்ல இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை பணி நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் உறங்கியுள்ளது விசாரணை தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கேட் கீப்பர் பணியில் இருக்கும் போது உறங்கினால் பணி நீக்கம் செய்ய தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அரக்கோணம் செங்கல்பட்டு பகுதியில் ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதியில் ஆய்வுப் பணியின் பொழுது தூங்கிக் கொண்டிருந்த கேட் கீப்பர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள LC 40, LC 44 ஆகிய கேட்களில் பணியில் இருந்த கேட் கீப்பர்கள் கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் தூங்கியது தெரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.