கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 08/07/2025 அன்று தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்த நிலையில் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி, செழியன் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கேட் கீப்பர் பணியில் கவனக்குறைவாக இருந்த பங்கஜ் சர்மாவிடம் இக்குழுவானது விசாரணை மேற்கொண்டது. மொத்தமாக 11 பேரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியம் தான் இந்த விபத்திற்கு முழு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே துறையின் தானியங்கி தொலைப்பேசி உரையாடலில் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் கேட் கீப்பருக்கு இடையே நடந்த உரையாடல் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.