கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி, குட்கா, கஞ்சா, வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கில் கஞ்சா மற்றும் போதை புகையிலை பொருட்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு உறுதுணையாக இருந்ததாக சிதம்பரம் டிஎஸ்பி உள்ளிட்ட 7 பேரை பணி நீக்கம் செய்துள்ளார். கடலூரில் ஆன்லைன் லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களே உதவி செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அதன் பெயரில் கடலூர் டிஎஸ்பி ரூபன்குமார் மேற்பார்வையில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் மஞ்சக்குப்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குண்டு உப்பலாவடி சப்தகிரி நகரைச் சேர்ந்த ஜெயராமன் (62) அவரது மகன் சாரதி (29), மனைவி மல்லிகா (55) மற்றும் புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெரு பிரகாஷ் ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ 22 லட்சத்து 94 ஆயிரத்து 500, அதேபோல் தங்கம் லாட்டரி சீட்டுகள் 10, நல்ல நேரம் லாட்டரி சீட்டுகள் 10 ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜெயராமன் மீது 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் என்பவர் மீது 3 லாட்டரி வாழக்குகளும் உள்ளன.
ஆன்லைன் லாட்டரி குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார். அதே நேரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடலூர் துறைமுகம் காவல் நிலையம் காவலர் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலர் தீனதயாளன், கடலூர் புதுநகர் காவல் நிலைய தனி பிரிவு காவலர் முத்துக்குமாரன் ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். குற்ற சம்பவத்திற்கு காவல்துறையினரையே உறுதுணையாக இருந்து ஆயுதப்படைக்கு மாற்றிய சம்பவம் ஆன்லைன் லாட்டரி 23 லட்சம் பறிமுதல் செய்தது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.