Cuddalore district schools closed today at Continuous heavy rain
சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதியில் 41 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மழைநீர் ஒரே நேரத்தில் வடிய முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் புளியமரம் மின்கம்பத்தின் மீது விழுந்து மின் கம்பிகளில் சிக்கி 3 பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், சிதம்பரத்தில் 13.5 செ.மீ, புவனகிரியில் 14 செ.மீ, சேத்தியாதோப்பு 21 செ.மீ, லால்பேட்டை 8 செ.மீ, காட்டுமன்னார்கோயில் 7 செ.மீ. பரங்கிப்பேட்டை 14 செ,மீ என மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் சில குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் லால்புரம் ஊராட்சியில் உள்ள தையாக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் புறவழிசாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் அதற்காக சாலை அமைக்கப்பட்டது. இதனால் மழைநீர் வடிய வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதனை ஊராட்சி நிர்வாகம் பொக்லின் இயந்திரம் மூலம் சாலையை உடைத்து தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் சிதம்பரம் நகரத்தை ஒட்டியோடும் கான்சாகிப் வாய்க்காலில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் அடைக்கப்பட்டுள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர் கனமழையாலும், நகராட்சியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us