தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாகக் கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisment

அதே சமயம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (16.11.2025) போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிர்த்து விஜய் நேற்று (15.11.2025) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 38 மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டிருந்தார். 

Advertisment

இந்நிலையில் சென்னை சிவானந்த சாலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எஸ்.ஐ.ஆர்.க்கும், அதில் உள்ள குளறுபடிகளுக்கும் எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும், ஓட்டுரிமை எங்களுடைய உரிமை என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதே சமயம் மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கலந்து கொண்டார்.  

இதற்கிடையே த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி குறித்து, விஜய் - ராகுல் காந்தி இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “வதந்திகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அந்த மாதிரி சந்திப்புகள், அறிவிப்புகள் இருந்தால் கண்டிப்பாகப் பொதுவெளியில் கூறப்படும். எனவே வதந்திகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம். கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. மக்களிடம் எங்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது” எனப் பேசினார்.

Advertisment