கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக இன்றும் (31.12.2025) ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் கரூர் துயர சம்பவ வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல்குமார், "எங்களிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், பதிலளித்துள்ளோம். அவர்கள் எங்களிடம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம்.
இந்த நிகழ்ச்சி குறித்தான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளோம். நிகழ்ச்சிக்கான அனுமதிக்கான ஆவணங்களையும், இன்ன பிற தகவல்களையும் அளித்துள்ளோம். இத்துடன் தற்போதைய விசாரணை நிறைவடைந்தது, மீண்டும் தேவைப்படும் பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். ஏனெனில் எங்களுக்கு 41 உயிருக்கான நீதி வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்த விளக்கம் கேட்டாலும் பதிலளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் சிபிஐயிடம் கொடுத்துள்ள தகவல்கள் பற்றி இப்போது பொது வெளியில் சொல்லமுடியாது.
விசாரணை முடிந்த பிறகு சிபிஐ சார்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். அதில் அனைத்து தகவல்களும் தெரியவரும். நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை கூறியுள்ளோம். தமிழ்நாடு அரசு எந்தெந்த இடங்களில் தவறவிட்டது, காவல்துறை எந்தெந்த இடங்களில் தவறவிட்டது என்பதும், பிரேத பரிசோதனையில் என்னென்ன தவறுகள் நிகழ்ந்துள்ளது என்றும், இந்த தவறு நடக்காமல் எவ்வாறு அவர்கள் தடுத்திருக்கலாம் என்பது குறித்தும் சிபிஐயிடம் தெரிவித்துள்ளோம். இந்த வழக்கு சம்பந்தமான வீடியோ மற்றும் தகவல்களை கொடுத்துள்ளோம். மேலும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/ctr-nirmal-pm-2025-12-31-22-57-44.jpg)