திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கடலாடி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், குமாருக்கும் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள மற்றொரு நபருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை காவல்துறையினர் சரியாக விசாரிக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குமாருக்கும் பக்கத்து நில உரிமையாளருக்கும் இடையே 8ஆம் தேதி காலை மீண்டும் தகராறு ஏற்பட்டு அடிதடியாகியுள்ளது. இதனால் குமார், தனது மனைவி பூங்கொடி ஆகிய இருவரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தரக் காத்திருந்துள்ளனர். ஆனால், அன்றைய தினம் தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு மாநில அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்தியத் தேர்தல் ஆணைய இயக்குநர் திவாரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் காலை 9.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் பாதிக்கப்பட்ட குமார் தம்பதியினர் மனு கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அலுவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேலே உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், கீழே பெரும் கூச்சலும் “ஐயோ.... காப்பாத்துங்க...” என்கிற அழுகுரலும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனே வெளியே வந்து பார்த்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் திருவள்ளுவர் சிலை முன்பு புகார் கொடுக்க வந்த குமாரும் அவரது மனைவியும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/5-2025-11-08-17-09-25.jpg)
மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்களும் காவல்துறை காவலர்களும் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு இருவரின் மீது இருந்த தீயை அணைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குமாருக்கு 35 சதவீத தீக்காயமும், அவரது மனைவி பூங்கொடிக்கு 40 சதவீத தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் மாவட்ட ஆட்சியரைத் தேடி வந்திருக்க மாட்டார்கள். வந்த இடத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது புகார் மனுவை கொடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் விரக்தி அடைந்த தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்குமாறு அதிகாரிகள் தங்களது பணியைச் செய்ய வேண்டும் என்று வேதனையுடன் வலியுறுத்தியுள்ளனர்.
Follow Us