கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா டவுனைச் சேர்ந்தவர் 32 வயதான ரேகா. இவருக்கு திருமணமாகி 9 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, மகள்களுடன் தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். பின்னர், அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர், புதிதாக வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டார்.
அதையடுத்து, தனியார் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த லோகேஷ் என்பவருடன் ரேகாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. லோகேஷும் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இதனால், ரேகாவும் லோகேஷும் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர். பின்னர், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லோகேஷ் மூன்று மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரேகாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பின், ரேகாவின் இளைய மகளைத் தாயிடம் விட்டுவிட்டு, மூத்த மகள் மற்றும் கணவர் லோகேஷுடன் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். அங்கே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தார். இதையடுத்து, லோகேஷும் ரேகா வேலை பார்க்கும் நிறுவனத்தில் டிரைவராகப் பணிக்குச் சேர்ந்தார். இந்த நிலையில், ரேகா அலுவலகத்தில் பணியாற்றும் வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக லோகேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து ரேகாவிடம் கேட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். ஆனால், ரேகா மறுத்து வந்தாலும், லோகேஷ் விடாமல் தொந்தரவு செய்துள்ளார்.
அந்த வகையில், 22-ம் தேதி அன்று காலை, வீட்டில் லோகேஷுக்கும் ரேகாவிற்கும் இடையே மீண்டும் இது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால், வீட்டை விட்டு, தனது மகளுடன் வேலைக்குச் செல்வதற்காக சுங்கதகட்டே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். சிறு நேரத்தில், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கணவர் லோகேஷ், பொது இடம் என்று கூடப் பார்க்காமல் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மகளின் கண் முன்னே ரேகாவைச் சரமாரியாக 11 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரேகா கீழே சரிந்து விழ, அங்கிருந்து லோகேஷ் தப்பியோடியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ரேகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார், தப்பியோடிய லோகேஷைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 23-ம் தேதி லோகேஷ் போலீஸில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு, மகளின் கண் முன்னே தாயைக் கொடூரமாகக் கொன்ற தந்தையின் செயல், பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.