“எல்லாமே போச்சி.. என்ன செய்றதுன்னே தெரியல...” - கதறி அழுத பெண் சி.ஆர்.பி.எஃப் காவலர்!

103

வேலூர் மாவட்டம், காட்பாடி, பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (65). இவரது மகள் 32 வயதான கலாவதி, ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப்(CRPF) காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஜூலை 24 அன்று அதிகாலை, குமாரசாமி தனது விவசாய நிலத்தில் வேலை செய்யச் சென்று, மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப்(CRPF) வீரராக பணியாற்றும் கலாவதி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "எங்கள் வீட்டில், என் அப்பா விவசாய நிலத்திற்குச் சென்றபோது, யாரோ வீட்டை உடைத்து, எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22 சவரன் நகைகள், பட்டுப் புடவைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, முதலமைச்சர் பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். தாமதமாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் எல்லாம் போச்சி. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரும் உதவவில்லை," என்று சீருடையில்  கண்ணீர் விட்டு கதறியிருந்தார்.

இந்த விடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்டிய நிலையில், இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் கேட்டோம். அப்போது, “புகார் அளித்த மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். புகார்தாரரும், பெண் காவலரும் யார் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினாரோ, அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 80 சதவிகித விசாரணை முடிந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் காணாமல் போன நகைகள் மீட்கப்படும். இந்தச் சூழலில், அவர் எதற்காக வீடியோ வெளியிட்டார் என்று தெரியவில்லை," என்றனர்.

மேலும், வீடியோவில் அழும் சி.ஆர்.பி.எஃப்(CRPF) வீரர் கலாவதிக்கு, பொன்னையைச் சேர்ந்த சத்யா என்ற ராணுவ வீரருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஆறு மாதங்களில் இருவரும் பிரிந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே வரதட்சணை மற்றும் திருமணச் செலவு தொடர்பாக பஞ்சாயத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கலாவதி, சத்யாவே நகைகளைத் திருடியிருக்கலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டிருக்கிறது. தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

crpf katpadi police Theft Vellore
இதையும் படியுங்கள்
Subscribe