தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர், 42 வயதான தமிழ்செல்வன். இவர் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி, வயது 37. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சென்னையில் பணியில் இருக்கும் நாட்களில், டூட்டி முடிந்து மனைவியிடம் போனில் பேச எப்போது அழைத்தாலும் வெயிட்டிங்கில் வந்த காரணத்தினால், சந்தேகமடைந்து கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விடுமுறையில் வீட்டிற்கு வந்த அவர், ஜூலை 31-ஆம் தேதி மனைவி உமா மகேஸ்வரியிடம், “உன்னுடைய போன் ஏன் அடிக்கடி வெயிட்டிங்கில் வருகிறது?” என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபோன்ற சண்டை வழக்கமாக நடக்கக் கூடியது என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், உமா மகேஸ்வரி குழந்தைகளுடன் தனி அறையில் தூங்கச் சென்றுவிட்டார். ஆனால், கடும் கோபத்தில் தூங்காமல் விழித்திருந்த தமிழ்செல்வன், நள்ளிரவு ஆனதும் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து, வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, தனி அறையில் குழந்தைகளுடன் அசந்து தூங்கிக்கொண்டிருந்த உமா மகேஸ்வரியின் பின்பக்கத் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிச் சிதைத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உமா மகேஸ்வரி துடிதுடித்து இறந்துள்ளார். இதனை அறியாமல், அவரது இரண்டு குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 2 மணி அளவில் குழந்தைகளை மெதுவாகத் தட்டி எழுப்பிய தமிழ்செல்வன், அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். உறவினர்கள், “என்ன விஷயம்?” எனக் கேட்டபோது, “சிறிது நேரத்தில் வந்து விவரமாகச் சொல்கிறேன்” எனத் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து வேகவேகமாக வெளியேறி தப்பியோடியுள்ளார். சந்தேகம் அடைந்த உறவினர்கள் உமா மகேஸ்வரிக்கு போன் செய்தபோது, அழைப்பு எடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் வலுத்து, உமா மகேஸ்வரியைத் தேடி வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோது, அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தமிழ்செல்வன் கொலை செய்திருப்பது தெரியவந்தது. தடயங்களை கைப்பற்றிய போலீசார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சி.ஆர்.பி.எஃப். வீரர் தமிழ்செல்வனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்செல்வன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ஏரல் காவல்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, ஏரல் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அங்கிருந்த தமிழ்செல்வனை கைது செய்து, ஏரல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “நான் மத்திய ரிசர்வ் காவல்படையில் சென்னையில் வேலை பார்த்தேன். டூட்டி முடிந்ததும் மனைவியிடம் போனில் பேச எப்போது அழைத்தாலும் வெயிட்டிங்கில் வந்த காரணத்தினால், எனக்கு என் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்தது. குடும்பத்தை சென்னைக்கு மாற்றலாம் என முடிவு செய்தபோது, என் மனைவி வர மறுத்துவிட்டார். இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 31-ஆம் தேதி இரவு எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை கீழ்த்தரமாக விமர்சித்ததால், எனக்கு கொலை வெறி ஏற்பட்டது. எனக்கு நிம்மதி இல்லாத காரணத்தினால், உமா மகேஸ்வரியின் கதையை இன்றோடு முடித்துக் கட்டுவது என முடிவு செய்தேன். குழந்தைகள் கண்முன் எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் தூங்கும் வரை நான் தூங்காமல் காத்திருந்தேன்.
நள்ளிரவு ஆனதும், அசந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, குழந்தைகளை மெதுவாக எழுப்பி, உறவினர்கள் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு, சென்னைக்குத் தப்பி வந்துவிட்டேன். காவல்துறை வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என நினைத்து, நான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தேன்” எனக் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, ஏரல் காவல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, கொலையாளியான சி.ஆர்.பி.எஃப். வீரர் தமிழ்செல்வனை கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் குடும்பத்தியனர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி