Crows lost in droves from bird flu in chennai
சென்னையில் நீலாங்கரை மற்றும் அடையாறு பகுதிகளில் கடந்த மாதம் ஏராளமான காகங்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்று வரை ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. ஒருவேளை, பறவைக் காய்ச்சல் காரணமாக இவ்வாறு காகங்கள் இறந்து வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே இருந்து வந்தது. இதையடுத்து, இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சோதனையில் வெளியான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இறந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக காகங்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று மனிதர்களுக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் நீட்சியாக, பறவைக் காய்ச்சலால் இறந்த காகங்களை யாரும் தொட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இறந்த காகங்களை 8 அல்லது 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மனிதர்களுக்கு இந்த பறவை காய்ச்சலால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட நாளடைவில், இந்த தொற்று மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு, இந்த இந்த தொற்று மனிதர்களைப் பாதிக்கும் பட்சத்தில் மிகக் கடுமையான விளைவுகள் அல்லது மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
Follow Us