தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது

Advertisment

அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இந்நிலையில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரூரில் நடைபெற்ற த.வெ.க. கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisment

ஜெ.பி. நட்டா, கரூருக்குச் சென்று இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அதன் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் பாஜக எம்.பி., ஹேமா மாலினி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். அதே சமயம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா மற்றும் பிரஜ் லால் (முன்னாள் டி.ஜி.பி.) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும்  சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. புட்டா மகேஷ் குமார் ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.