கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கரூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்திய வாகனம் (பிரச்சாரப் பேருந்து) இன்று (10.01.2026) கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் பேருந்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். வாகனத்தின் மேல் விஜய் நின்று பேசிய இடம், அளவிடு செய்யும் டேப் உதவியுடன் பேருந்தின் நீளம், அகலம் உள்ளிட்டவை துல்லியமாக அளவிடு செய்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் பரணிதரனை, விஜய் அமரும் இடத்தில் அமர வைத்து பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் வாகனத்தை எப்படி இயக்கினீர்கள்?.
எத்தனை மணிக்கு வந்தீர்கள்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது த.வெ.க தலைமை அலுவலக அலுவலக உதவியாளர் குரு உள்ளிட்ட 5 பேர் சி.பி.ஐ. அலுவலர்கள் முன்பு ஆஜராகினர். சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு பரப்புரை வாகனம் கரூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. அதே சமயம் சி.பி.ஐ. விசாரணைக்குத் தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராகும்படி அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/karur-stampede-cbi-vijay-bus-2026-01-10-23-21-48.jpg)