புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் தண்ணீர் நேரடிப் பாசனம் இல்லாமல் ஏரி, குளங்களில் நிரப்பி வைத்து பாசனம் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். வழக்கம் போல மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறந்தாலும் கல்லணை கடைமடைப்பகுதிக்குப் பல நாட்களுக்கு பிறகே தண்ணீர் வந்து சேரும். அதனால் விவசாயமும் தாமதமாகவே செய்கின்றனர். அதே போலத் தான் இந்த ஆண்டும் ஆயிங்குடி, வல்லவாரி உள்ளிட்ட பல கிராமங்களிலும் தாமதமாக நடவு செய்திருந்தனர். ஆனால் இடையிடையே தண்ணீர் நிறுத்தப்பட்டு வந்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பவில்லை. 

Advertisment

தற்போது முழுமையாகத் தண்ணீர் நின்றுபோனதால் கதிர் வந்த நிலையில் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கடைமடைப்பாசனப் பகுதியில் கருகும் அந்தப் பயிர்களைக் காப்பாற்ற சில வாரங்கள் தண்ணீர் வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து ஆயிங்குடி பகுதி விவசாயிகள் கூறும்  போது, பருவமழை சராசரியாகப் பெய்யும் காலங்களில் முப்போகம் விளைந்த பூமி இது. ஆனால் இடையில் வறட்சி ஏற்பட்டதால் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் பற்றாக்குறையாக வந்ததால் ஒரு பருவமழை பெய்யும் காலத்தில் மட்டும் ஒரு போகம் மட்டும் நெல் நடவு செய்கிறோம். 

Advertisment

அதிலும் கல்லணைத் தண்ணீர் நேரடியாகப் பாயாது. கல்லணைத் தண்ணீரை ஏரி குளங்களில் தேக்கித் தான் விவசாயம் செய்கிறோம். தற்போது கால்வாய் காங்கிரீட் தளம் அமைக்கும் போது ஆழமாகவும் கிளை வாய்க்கால், ஏரி குளங்களுக்குத் தண்ணீர் செல்லும் மடைகளை உயரமாகவும் அமைத்துள்ளதால் ஏரி குளங்களில் தண்ணீர்நிரம்வில்லை. பல நாட்கள் மடைகளுக்கு கீழேயே தண்ணீர் சென்றது. தற்போது ஆயிங்குடி, வல்லவாரி ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாததால் வயல்வெளியில் நெல் பயிர்கள் கதிர் வந்ததோடு காயத் தொடங்கியுள்ளது. ஆகவே இன்னும் சில வாரங்கள் தண்ணீர் வந்தால் கருகும் பயிர்களைக் காப்பாற்றலாம் என்கின்றனர்.