கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளி கிராமத்தில் வசிப்பவர் சீனிவாசன். இவர் நேற்று (27.09.2025 -சனிக்கிழமை) இரவு அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று (28.09.2025) அதிகாலையில் சீனிவாசன் மட்டும் எழுந்து வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார். 

Advertisment

அப்போது ஏதோ மர்மமான முறையில் பெரிய அளவில் கட்டை போன்று ஒரு பொருள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவர் அருகே சென்றபோது அசைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன அவர் கூச்சலிட்டுள்ளார். இவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் தூக்கக் கலக்கத்தில் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது 10 அடி நீளம் உள்ள முதலை ஒன்று இருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

Advertisment

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 10 அடி நீளமும் 400 கிலோ எடையுடைய முதலையைப் பொதுமக்கள் உதவியுடன் முதலையின் முகத்தில் ஈரச் சாக்கை போட்டு பின்னர் முகத்தைக் கயிற்றால் கட்டி வாகனத்தில் எடுத்து சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி குளத்தில் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.