நாமக்கல்லில், நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாகராஜபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஒப்பந்ததாரரான தனபால் தலைமையில் 10 பேர் கடந்த 10 நாட்களாகச் சாரம் கட்டியும், கிரேன் மூலமும் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 4வது தளத்திற்கு வெளிப்புறத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக இன்று (15.08.2025) காலை எருமப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் ஜோதி, சுகுமார் மற்றும் முகேஷ் கண்ணா ஆகிய 3 பேரும் கிரேன் பெட்டி மூலம் மேலே சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சாய்ந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது விழுந்தது. அதாவது சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கிரேன் சாய்ந்ததில் அதன் பெட்டியில் இருந்த ஜோதி மற்றும் சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி மற்றும் படுகாயம் அடைந்த முகேஷ் கண்ணா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த விபத்துக்கான காரணம் குறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கிரேன் ஆப்ரேட்டர் கவனக் குறைவாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்கம்பி மீது கிரேன் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.