விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இன்று காலை, பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தனர். அப்போது ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ அருகில் இருந்த அறைகளுக்குப் பரவியது. 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த வெடி விபத்தில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி (வயது 50) உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ், ராம், ராகேஷ் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உட்பட ஏழு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர் யோகநாதன் கைது செய்யப்பட்டு, வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.