வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில், பள்ளிகொண்டா அருகே உள்ள வல்லண்டராமம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கத்தின் மகன் சதீஷ்குமார் (45). இவருக்கு இந்துமதி, சங்கீதா என இரு மனைவிகள் உள்ளனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில், தீபாவளி பண்டிகையின்போது தற்காலிகப் பட்டாசு கடை நடத்துவதற்கு உரிமம் பெற்று கடை நடத்தி வருகிறார். மேலும், தற்காலிகப் பட்டாசு கடை நடத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள், ராக்கெட் பானங்கள், அதிக ஒலி எழுப்பும் குண்டு வெடிகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், அரசின் அனுமதியின்றி வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், அணைக்கட்டு தாசில்தார் சுகுமார், துணைத் தாசில்தார் ரமேஷ், விநாயகமூர்த்தி, அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் இரவு திடீரென அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 2 லட்சம் மதிப்புள்ள, சுமார் 50 கிலோ எடை கொண்ட 500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள், ராக்கெட் பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

Untitled-1

உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. நந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி மற்றும் சுபா உள்ளிட்டோர் விரைந்து வந்து, வெடிபொருட்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சதீஷ்குமாரைக் கைது செய்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, தற்காலிகப் பட்டாசு கடை நடத்துவதற்கு அனுமதி பெற்று, நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அதிகாரிகள் நள்ளிரவில் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்டபோது, இவரது மனைவி அதிகாரிகளின் காலில் விழுந்து, "வாழ்வாதாரம் போய்விடும்," எனக் கதறியுள்ளார். ஆனால், மறுபுறம், இதுபோன்று உரிமமில்லாத பட்டாசு ஆலைகளால் தான் அப்பாவி தொழிலாளர்கள் வெடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதேபோன்று, அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment