கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கல்லூரி மாணவன் ஜெயசூர்யா மரணத்தை விபத்தில் இறந்ததாக திசை திருப்புவதை கண்டித்தும், ஆணவ படுகொலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்த கோரியும், தமிழக அரசு ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை இற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதாச்சலம் பாலக்கரை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் டி.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச் செல்வன், வட்ட செயலாளர் கே.எம்.குமரகுரு, திட்டக்குடி வட்ட செயலாளர் ஏ.அன்பழகன், நெய்வேலி செயலாளர் ஆர்.பாலமுருகன், திருமுட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.தினேஷ் பாபு, குறிஞ்சிப்பாடி செயலாளர் எம்.பி.தண்டபாணி, வடலூர் செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மூத்த தலைவர் டி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், ஈஸ்.பிரகாஷ், பழ.வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.கே.சரவணன், வி.மேரி, பி.மாதவி, பி.முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், விருத்தாசலம் கல்லூரி மாணவர் மர்ம மரண வழக்கை சிபிசிடி போலீசார் துரிதப்படுத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். விருத்தாசலத்தில் அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியது, “விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த ஜெயசூர்யா என்ற மாணவன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கடலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வரும்போது விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் நிறைய சந்தேகங்கள் உள்ளது. விபத்து நடந்ததை பார்க்கும்போது, விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அவர் ஓட்டி வந்த வாகனம் சிறு சேதாரம் கூட ஆகவில்லை. உடன் வந்த இரண்டு பேருக்கும் சிறு காயம் கூட ஆகவில்லை. ஜெயசூர்யாவை தாக்கி படுகொலை செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகத்தான் அவருடைய பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து நடந்த பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல், உடலை கடலூர் கொண்டு சென்று பெற்றோர்களுக்குகூட அவருடைய உடலை காட்டாமலும் அவர்களுடைய சம்மதமே இல்லாமலும் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
ஜெயசூர்யாவின் பெற்றோர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை துரிதப்படுத்தி அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையை மூடி மறைக்கும் மாதரி இந்த விசாரணை இருக்கக் கூடாது. கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று பல கொலை வழக்குகளை தற்கொலை வழக்காக மாற்றப்பட்ட போது அதனை மீண்டும் கொலை வழக்காக மாற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. குறிப்பாக விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கை ஆரம்பத்தில் தற்கொலை வழக்காகத்தான் பதிவு செய்தனர். சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்த பிறகுதான் அது ஆணவக் கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கை மூடி மறைக்க நினைத்த காவல்துறை கண்காணிப்பாளரும் ஆயுள் தண்டனை அனுபவிக்கக்கூடிய நிலை உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு சிபிசிடி போலீசார் உண்மையான விசாரணை நடத்த வேண்டும். உண்மை என்ன என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். உண்மையை மூடி மறைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம்” என்று தெரிவித்தார்.