சிதம்பரம் அடுத்த பி.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தச்சக்காடு கிராமத்தில் கடந்த 30-ம் தேதி, பி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்களான இலியாஸ் மற்றும் சுல்தான் ஆகியோர், ஒரு வருடத்திற்கு முன்பு மூடப்பட்ட சவுடு மணல் குவாரியில் தேங்கிய மழைநீரில் குளிக்கச் சென்றபோது, அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக தோண்டப்பட்ட மணல் குவாரியில் அதிக ஆழம் இருந்ததால் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
உயிரிழப்புக்கு காரணமான மணல் குவாரி உரிமையாளர் மட்டுமல்லாமல், அதற்கு துணைபோன அனைத்து அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை முழுமையாக ஆய்வு செய்து, சட்டப்படி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.விஜய் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அம்சையாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ஜெயசீலன், பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வி.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்களான அசன்முகமது, மன்சூர், கொளஞ்சியப்பன், பாண்டியன், கோபிநாத், விமலா, தனசேகர், ஜீவா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, மணல் குவாரியில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்கு துணைபோகும் அதிகாரிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரி, இந்த மாணவர்கள் ஏன் அங்கு குளிக்கச் சென்றார்கள் என்றும், அனுமதியின்றி இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வது போல, இந்த மாணவர்களைப் பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை எனக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதாபிமானமற்ற வகையில் பேசுகிறார்.
இந்த மாணவர்கள் உயிரிழந்ததற்கு காரணம், இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள், சுயநலத்திற்காக மணல் எடுக்கும் அளவைக் கண்காணிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்தில் தோண்டியதே ஆகும். எனவே, இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.