CPM agents engaged in argument with corporation officials at Special Intensive Revision
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில், இன்று (04-11-25) முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முதல் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கை டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று பிப்ரவரி 7ஆம் தேதியன்று வரைவு வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிடவுள்ளனர்.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக சென்னை எழும்பூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக வாக்குச்சாவடி முகவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி கூட்டம் தேவைப்படுகிறது என நேற்று (03-11-25) சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சி முகவர்களும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் பிரத்யேகமாக இன்று (04-11-25) பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ள ஒரு மாதத்திற்குள் அனைத்து படிவங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி முகவர்கள், ஒரு மாதத்திற்குள் அனைத்து படிவங்களையும் கொண்டு சேர்ப்பது சாதாரண விஷயமல்ல என்றும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கிறது அதை எங்களால் சரிவர செய்ய முடியாது என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் பின்னால் அமர்ந்திருந்த அதிமுக முகவர்கள், ஒரு மாதத்தில் எங்களாக் படிவங்களை கொண்டு சேர்க்க முடியும் என்று கூச்சலிட்டனர்.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முகவர்களுக்கும், அதிமுக முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அமர வைத்தனர். அதனை தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் படிவங்களை கொண்டு சேர்க்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முகவர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாததில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முகவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றுவிட்டனர்.
Follow Us