Advertisment

“போலி மருந்து மாஃ@பியா@க்களைத் தப்பவிடும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. அரசு” - சி.பி.எம். கடும் கண்டனம்!

py-sec-cpim

போலி மருந்து மாஃபியாக்களை தப்பவிடும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வெ. பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியை மையமாக வைத்து, இந்தியா முழுவதும் போலி மருந்துகளை விநியோகம் செய்து, மக்களின் உயிரோடு விளையாடிய குற்றவாளிகள் கூட்டத்திற்கு, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

Advertisment

இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்களை, மிக எளிதாக ஜாமீனில் வெளியே வர உதவிய புதுச்சேரி காவல்துறை மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த ஜனவரி 6, 2026 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் (Crl.M.P. No. 28/2026) நீதிபதி சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள், இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

Advertisment

ஆதாரங்களை மறைத்த காவல்துறை: இதய நோய்க்கான 'ரோசுவாஸ்' (Rosuvas) மற்றும் நுரையீரல் சிகிச்சைக்கான 'மான்டெக் எல்சி' (Montek LC) போன்ற உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அரசே குற்றம் சாட்டுகிறது. ஆனால், கைது செய்யப்பட்டு இவ்வளவு நாட்களாகியும், அந்த மருந்துகள் தரமற்றவை என்பதற்கான ‘தடயவியல் ஆய்வக அறிக்கையை (Forensic Lab Report)’ காவல்துறை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது குற்றவாளிகளை காப்பாற்றும் திட்டமிட்ட சதி இல்லையா?

judgement

காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?: ஜெகன் (எ) மதுரை முத்து, சொக்கலிங்கம் போன்ற முக்கிய குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் இருந்தபோது, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அரசுத் தரப்பு எந்த முயற்சியும் செய்யவில்லை. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?. யாருடைய பெயர்கள் வெளியே வந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்?. துணைநிலை ஆளுநர் உத்தரவின் பேரில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 23.12.2025இல் வழக்கு மாற்றப்பட்டாலும், இன்றுவரை சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை. ‘சிபிஐ பாத்துக்கொள்ளும்’ என்று மாநில போலீசும், ‘இன்னும் வழக்கு கைக்கு வரவில்லை’ என்று சி.பி.ஐ.யும் மாறி மாறி நாடகம் ஆடி, இறுதியில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வர வழிவகுத்துள்ளனர்.

சட்ட நடைமுறைகளில் வேண்டுமென்றே குளறுபடி: கைது செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய பி.என்.எஸ் சட்டப் பிரிவு 35(3) (முன்பு 41A CrPC) நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வளவு பெரிய வழக்கை கையாளத் தெரியாதவர்களா நம் காவல்துறையினர்? அல்லது வேண்டுமென்றே ஓட்டைகளை உருவாக்கினார்களா?. கோரிக்கைகள்: மக்களின் உயிருக்கு உலை வைக்கும் போலி மருந்து வியாபாரிகளை பாதுகாக்கும் இந்த போக்கை அரசு கைவிட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ. (எம்)) கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறது: உடனடி சிபிஐ விசாரணை: சிபிஐ உடனடியாக இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்.

py-gov-cm

அதிகாரிகள் மீது நடவடிக்கை: தடயவியல் அறிக்கையைத் தாக்கல் செய்யாமலும், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமலும் குற்றவாளிகள் தப்ப உதவிய காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிணையை ரத்து செய்: ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகள், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளதால், அரசு மேல்முறையீடு செய்து அவர்களது ஜாமீனை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடும் இந்த விவகாரத்தில், அரசு தனது மெத்தனப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

b.j.p cm rangasamy CPI(M) nr congress Puducherry Kailashnathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe