தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்கு மெட்ரோ  ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னை தங்க சாலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். அப்போது  டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் எனப் பேசினார்.  அதாவது அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “நேற்று மாலை புது டெல்லியில் ஒரு கார் வெடிவிபத்து  ஏற்பட்டு அதிலே அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து எப்போதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் இத்தகைய வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

இன்றைய தினம் பீகாரிலே இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று மாலை இத்தகைய கொடூரமான ஒரு வெடிவிபத்து ஏற்பட்டு13 பேர் பலியானது மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் காயமடைந்து மிக ஆபத்தான நிலையிலே மருத்துவமனையில் இருக்கிறார்கள்.டெல்லி தலைநகரம் என்பது உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கக்கூடிய நகரம். அந்த நகரத்திலேயே பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இத்தகைய வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். உள்துறை அமைச்சருடைய கட்டுப்பாட்டிலே தான் தலைநகர் டெல்லி தலைநகரத்தின் பாதுகாப்பு இருந்து கொண்டிருக்கிறது. டெல்லியிலே மாநில அரசாங்கம் என்று ஒன்று இருந்தாலும் பாதுகாப்பு உள்துறையினுடைய கட்டுப்பாட்டிலே தான் இருக்கிறது” எனப் பேசினார்.