கோப்புப்படம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், “பாஜக, அதிமுகவை மூன்றாக உடைத்து, தற்போது அந்த கட்சிகளையும் சேர்த்து புதிய கட்சிகளோடும் கூட்டணி அமைத்து வலிமை பெற்றுள்ளதாக கூறி வருவது நகைச்சுவையானது. இடைபட்ட காலத்தில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணி குறித்தும், எடப்பாடி பழனிசாமியை பற்றியும், பாஜகவை பற்றியும் கடுமையாக விமரிசித்து பேசியுள்ளார். என்டிஏவுடன் கூட்டணி வைப்பதற்கு தூக்கு மாட்டிக்கொள்ளலாம் என கூறினார். ஆனால் பதவி, சந்தர்ப்பவாதம் மற்றும் தங்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கத்தோடு கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. பாஜக அரசு இந்த 10 ஆண்டுகளில் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கான திட்டத்தை அறிவிக்கவில்லை. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தை அழித்து விட்டு பிரதமர் தமிழ்நாட்டில் வாக்கு கேட்க வந்துள்ளார். காந்தி பெயரை நீக்கியது மட்டுமல்லாமல் ஓட்டுமொத்தமாக அதில் உள்ள சட்ட உரிமையை பறித்துவிட்டது. இதுவரை 90 சதவீதம் ஒன்றிய அரசு நிதியும், மாநில அரசு 10 சதவீதம் நிதியுடன் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. தற்போது மத்தியஅரசு 60 சதவீதம் நிதியும், மாநில அரசு 40 சதவீதம் நிதி என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 40 சதவீத நிதியை மாநில அரசு ஒதுக்கினால்தான், மத்திய அரசு வேலை திட்டத்திற்கு நிதி வழங்கி நிறைவேற்றப்படும். ஏற்கனவே பாஜகவின் கொள்கைகளால் பல்வேறு மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போது இந்த அறிவிப்பு மேலும் நிதி சிக்கலை உருவாக்கும்.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் ஏன் வழங்கவில்லை. திமுக அரசு மகளிருக்கு ரூ. ஆயிரம் தருவதாக அறிவித்த போது, அரசால் கொடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் திமுக அரசு மகளிர் உதவித்தொகை ரூ. ஆயிரம் வழங்கியுள்ளது. எனவே வரும் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். தேர்தல் தேதி வரவரைக்கும் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தேர்தலுக்குள் எப்படியாவது திமுகவில் இருக்கின்ற அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பல்வேறு வகையில் சிக்க வைத்து அவர்களை அலைக்கழிக்க வேண்டும். அப்படிதான் டெல்லியிலும் செய்தார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/nda-alliance-2026-01-23-21-58-57.jpg)
மாநில அரசையும் அமைச்சர்களையும் அலங்கோலபடுத்தி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது நடக்காது. அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. நீங்கள் கூட்டணி சேர்ந்து உள்ளீர்களே?. அதிமுக என்ன ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியா?. சிதம்பரத்தில் நீதிமன்ற உத்தரவு என காரணம் காட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கவில்லை. உடனடியாக மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு அபத்தமானது. சனாதான கோட்பாட்டை எதிர்க்கிற காரணத்தாலேயே இந்து மக்களை எதிர்ப்பதாக நீதிபதி இட்டுக்கட்டி தீர்ப்பு கூறுவது அபத்தமானது. மோசமானதாகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சனாதான ஓழிப்பு மாநாட்டை நடத்தியது. அதில் உதயநிதி பேசுகையில் சனாதான கோட்பாடு தேவையில்லை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார். வர்ணாசிரம் முறையை ஓழிக்க வேண்டும் எனவும் கூறினார். நீதிபதி சனாதானத்தை விரும்புகிறாரா?. வர்ணாசிர தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்கிறறா?. அது அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதா? சனாதானத்தை ஒழிப்பது என்றால் அதை நம்புகிற இந்து மக்களை ஒழிப்பது என்று எப்படி அர்த்தமாகும்” என்றார்
Follow Us