கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த 27-ந் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தபோராட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, இளங்கோ, மதியழகன், கபில்தேவ் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 2-வது நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து பேசுகையில் தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கி 12 ஆண்டுகள் ஆகியும் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த எதையும் செய்யவில்லை. கட்டிடங்கள் எப்படி அப்படியே உள்ளதோ அதேபோல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் புதிய சலுகைகளை கேட்காமல் ஏற்கனவே உள்ளதை பாதுகாத்துக் கொடுங்கள் ஓய்வு பெற்றால் ஓய்வூதியத்தை கொடுங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். ஊழியர்களின் சாதாரண கோரிக்கையை கூட அதிகாரிகள் செவி மடுக்க மறுக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு பெற்றும் அதனை அமல்படுத்த மறுக்கிறார்கள். அரசு அதிகாரிகளின் அக்கறை இன்மையால் இன்று அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்,ஊழியர்கள் போராடி வருகிறார்கள். இதுகுறித்து தலைமை செயலாளரிடம் நான் பேசிய போது உடனடியாக போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறினார். எனவே அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் பிப்ரவரி 2-ந்தேதி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். ஆனால் ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தால் எந்த பணியும் நடைபெறவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்ட்டுள்ளது. ஆளுநரே இங்கு வந்து எல்லா பணியும் செய்து பட்டங்களை வழங்கி விடுவாரா? எனவே பட்டமளிப்பு விழா பட்டம் விடுகிற கேளிக்கை விழாவாக அமைந்து விடும். எனவே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் உறுதிமிக்க போராட்டம் என்ற ஆயுதம் தான் வெற்றியை தேடி தரும். வெற்றி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று பேசினார். இவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையா, பழ.வாஞ்சிநாதன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணை தலைவர் முத்துகுமரன், ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஜி.பழனி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Follow Us