குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இந்தியா கூட்டணியும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்ற இரு அவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 426 எம்.பிக்கள் உள்ளதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தற்போதில் இருந்தே வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.

அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருபக்கம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறுபுறம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என இந்தியா கூட்டணியும் மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (20-08-25) வேட்புமனுத் தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேரடியாகச் சென்று நாடாளுமன்றத்தில் உள்ள செயலாளரிடம் சி.பி ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை அளித்தார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதிமுக எம்.பி தம்பிதுரை, தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை (21-08-25) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.