Court's sensational verdict in the Thiruparankundram case
கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கான முழுமையான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டடிருந்தார். ஆனால், கார்த்திகை தீபத் திருநாளான நேற்று (03.12.2025) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபத்தை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்தனர். இதனால், இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவி அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இன்று (04.12.2025) வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிடுகையில், “தீபம் ஏற்ற உயர்நீதிமன்றத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எப் படையினரின் பாதுகாப்போடு செல்லுங்கள் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அது விதிமுறைக்கு எதிரானது. சட்ட விரோதமானது ஆகும். இந்த உத்தரவால் தான் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் தான் 144 தடை உத்தரவு போட வேண்டிய தேவை உருவானது. மனுதாரரோடு அவர் பாதுகாப்புக்காக சி.எஸ்.ஐ.எப். படையினர் 67 பேரை அனுப்பி வைத்தது விதிமுறைக்கு எதிரானது. உயர்நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு வந்தவர்களை எப்படி இன்னொரு தனிநபருடைய பாதுகாப்புக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் தனி நீதிபதியின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டது ஆகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற உத்தரவுகள் எல்லாம் தனி நீதிபதியால் பிறப்பிக்க முடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக சில விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருந்தும் எதற்காகத் தனி நீதிபதி இப்படி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தனர். அதனை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, “தனி நீதிபதி உத்தரவில் விதி தவறு இருப்பதாக தெரியவில்லை. தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் மனுதாரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். காவல்துறை பாதுகாப்பை வழங்க தவறியதாலேயே மத்திய படை செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு கடமையை செய்யத் தவறியதால் தான் சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கை தொடர்ந்துள்ளது. அதனால், இந்த விவகாரத்தை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே மீண்டும் விசாரிப்பார்” என்று தீர்ப்பளித்தனர்.
Follow Us