தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கணவனை 30 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 1995ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு ஐபிசி பிரிவுகள் 498ஏ மற்றும் 306 ஆகியவற்றின் கீழ் சதாராவில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 1998ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எஸ்.எம்.மோடக் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமையான நிறத்தை வைத்து கணவன் கேலி செய்துள்ளார். அவரை பிடிக்கவில்லை என்று தொடர்ந்து கூறியுள்ளார். மேலும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அதே நேரத்தில், பெண்ணின் மாமியார் மாமனார் அவர் சமைத்த உணவை குறைக் கூறிகொண்டே இருந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ‘இந்த சம்பவங்கள் குற்றவியல் நடத்தை அல்ல, குடும்பப் பிரச்சினை தான். இதை திருமண வாழ்க்கையில் எழும் சண்டைகள் என்றே கூறலாம். பெண்ணை தற்கொலைக்கு கட்டாயப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த அளவு என்று கூற முடியாது. திருமண வாழ்க்கையில் எழும் ஒவ்வொரு தகராறு, சண்டை அல்லது வாக்குவாதமும் குற்றவியல் குற்றங்கள் அல்ல என்று கருதுகிறது. முகம் நிறம் பற்றிய கருத்துக்கள், இரண்டாவது திருமண அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட வீட்டுச் சண்டைகள் சட்டத்தின் கீழ் குற்றவியல் துன்புறுத்தலாகாது.

Advertisment

துன்புறுத்தல் காரணமாக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் மட்டுமே அது குற்றவியல் சட்டமாக எடுக்கும். குடும்பத்திற்குள் பதற்றம் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கான சான்றுகள் இருந்தபோதிலும், கொடுமை அல்லது தற்கொலைக்குத் தூண்டியதை நிரூபிக்கத் தேவையான சட்ட வரம்பை அவை பூர்த்தி செய்யவில்லை. கூறப்படும் துன்புறுத்தலுக்கும் பெண்ணின் தற்கொலைச் செயலுக்கும் இடையே நேரடி தொடர்பை நிறுவ அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, ஐபிசி 498 A இன் கீழ் ஒரு குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று கூறி அந்த நபரின் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.