Court verdict at Caste untouchability against Scheduled Caste girl cooking in government school
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அருகே உள்ள திருமலைக் கவுண்டபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், பாப்பாள் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமையலராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் போது, பட்டியலினப் பெண் சமைத்த உணவை தங்களது குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பிற சாதியைச் சேர்ந்த சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரை சமையல் செய்யவிடாமல் தடுத்து அவர் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளியைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த தீண்டாமை கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 36 பேர் மீது மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் இருந்து மீனாட்சி என்பவர் நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்த 35 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 31 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த தீண்டாமை வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (28-11-25) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 31 பேரில் 25 பேரை விடுவித்து, 6 பேரை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, வெள்ளியங்கிரி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Follow Us