காதல் கணவரை, ஆண் நண்பருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய வழக்கில் அரசு பள்ளி ஆசிரியைக்கு, மரணத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.  கடந்த 2016 ஆம் நடந்த இந்த சம்பவத்தில்  9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது,  தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியை சற்று விரிவாக பார்ப்போம்..... 

Advertisment

கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் இம்தியாஸ் அகமது கான். அப்போது அவரும், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த லட்சுமி என்பவரும் காதலித்து மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையொட்டி, கடந்த 2011 ஆம் ஆண்டு இம்தியாஸ் அகமது கான், லட்சுமியைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவரும் அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இம்தியாஸ் சொரப் தாலுகாவில் உள்ள தெலகுந்தா கிராமத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால், லட்சுமியும் பத்ராவதி அருகிலுள்ள ஒரு பள்ளிக்கு பணி மாற்றம் பெற்று அங்கு சென்றார்.

இதையடுத்து, பத்ராவதி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இம்தியாஸ் அகமது கான், அவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் ஆகிய மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் தனது பள்ளிக்கூட நண்பரான டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை லட்சுமி சந்தித்துள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்திக்கும், லட்சுமிக்கும் இடையே பள்ளிக்கால நட்பு மீண்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. பின்னர் அது நெருக்கமான உறவாக மாறி, காலப்போக்கில் திருமணத்தை மீறிய உறவாகவும் உருவெடுத்தது.

Advertisment

நீண்ட நேரம் செல்போனில் பேசுவது, அவ்வப்போது சந்தித்து தனிமையில் இருப்பது என்று தங்களது உறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் தனது காதலர் கிருஷ்ணமூர்த்தியை தனது வீட்டின் அருகே குடியமர்த்தி, கணவர் இம்தியாஸ் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில்  உல்லாசமாக இருந்து வந்திருக்கின்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமியின் மகன், தனது தந்தை இம்தியாஸிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த இம்தியாஸ், லட்சுமியை அழைத்து கிருஷ்ணமூர்த்தியுடனான தொடர்பை கைவிடுமாறு கூறி எச்சரித்துள்ளார். இருப்பினும், லட்சுமி, கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில் தான் 2016 ஆம் ஆண்டு ஜூலை  7 ஆம் தேதி இரவு இந்த விவகாரம் தொடர்பாக இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இம்தியாஸ் லட்சுமியை அடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது காதலன் கிருஷ்ணமூர்த்திக்கு செல்போனில் தகவல் கொடுத்து உடன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர் சிவராஜ் என்பவருடன் இம்தியாஸின் வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisment

அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, இம்தியாஸை மனைவி லட்சுமி, அவரது காதலன் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து கம்பியால் கடுமையாகத் தாக்கி படுகொலை செய்தனர். பின்னர், மூவரும் சேர்ந்து அவரது உடலை பத்ரா ஆற்றில் வீசினர். இதுதொடர்பாக இம்தியாஸ் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்போது மாநிலம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக பத்ராவதி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், முக்கிய குற்றவாளியான லட்சுமி மற்றும் அவரது காதலர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கு மரணத் தண்டனையும், அவர்களுக்கு உதவியதற்காக சிவராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை கொடுத்திருப்பது சற்று ஆறுதலைத் தருவதாக இம்தியாஸ் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.