கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜூடோ மற்றும் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது சென்னை அண்ணாநகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது காரில் பாலியல் தொல்லை தந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின்னர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து பாலியல் வழக்கில் கேபிராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம்.
முன்னதாக அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (13/08/2025) இந்த வழக்கில் நீதிபதி பத்மா முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றுது. இந்நிலையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் கெபிராஜ்க்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.