Court sentences couple to torture minors in films
உத்திர பிரதேசம் மாநிலம் பாண்டா மாவட்டம் நரேனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்பவன். இவரது மனைவி துர்காவதி. ராம்பவன், அம்மாநில நீர்ப்பாசனத் துறையில், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், உத்திரப்பிரதேசத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாசப் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பதிவேற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோரை கைது செய்தது.
அதை தொடர்ந்து சிபிஐ நடத்திய விசாரணையில் பாண்டா, அமீர்பூர் மற்றும் சித்ரகூட் உட்பட அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சிறார்களை ஆபாசமான முறையில் வீடியோ மற்றும் நிழற்படங்கள் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவேற்றியதும் தெரியவந்துள்ளது. அதோடு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பென் ட்ரைவில் 34 வீடியோக்களும், 679 புகைப்படங்களும் இருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், ராம்பவன் மற்றும் அவரது கூட்டாளிகள் டார்க் வெப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறார்கள் பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோக்களை விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, குற்றவாளிகள் 3 செல்போன்களைப் பயன்படுத்தி டார்க் வெப் வழியாகச் சிறார்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாடுகளில் விற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில்,74 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தனர். அதில், 25 பேர் பாதிக்கப்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு போக்ஸோ நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தனது 163 பக்க தீர்ப்பில் இந்த குற்றச் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அதோடு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளார். அதில், குற்றச் செயலில் ஈடுபட்ட ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் சாட்சி அளித்த ஒவ்வொரு பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us