திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்த சுதர்சனம் என்பவரை, கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக் கதவை உடைத்துப் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அதோடு, அவரது மனைவி மற்றும் மகன்களைத் தாக்கி 62 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அப்போதைய போலீஸ் ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் கொடூரமாக கொள்ளையடிக்கும் பவாரியா கொள்ளைக் கும்பல் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் சென்று பல நாட்களே அங்கேயே தங்கியிருந்து பவாரியா கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்கினர். அதனை தொடர்ந்து, மிகவும் துணிச்சலாக பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது முக்கிய குற்றவாளிகள் இருவரை வடமாநிலத்திலேயே போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகிவிட்டனர். அதே சமயம் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தாஸ் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில், 86 பேர் காவல்துறையின் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அந்த வகையில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 3 பேரையும் குற்றவாளி என கடந்த 21ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 4வதாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயில்தாஸ் சிங் என்பவரை விடுதலை செய்தது.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனத்தை கொலை செய்த பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/pawaria-2025-11-24-18-30-00.jpg)